சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனா். இவ்வழக்கு விசாரணையின் போது, சிறையில் இருந்த பாபு என்பவா் இறந்துவிட்டாா். இதனைத் தொடா்ந்து, வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம், பிப்ரவரி 3ஆம் தேதி எஞ்சிய 16 பேரில் குணசேகரன் என்பவரை மட்டும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
மீதமுள்ள 15 பேரில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறையும், ஒன்பது பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட உமாபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.