நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு வெளி பகுதியான மசினக்குடி பகுதியில் உலவி வந்த ரிவால்டோ எனும் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானையை வனத்துறையினர், யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர். வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்த அந்த யானை, தப்பித்து மீண்டும் வாழைத்தோப்பு எனும் பகுதிக்கு திரும்பி விட்டது.
இந்நிலையில், யானையை பிடிக்க வனத்துறையினருக்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் ஆர்வலர் முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வனத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் விஜய் பிரசாந்த், யானையின் துதிக்கை துளை சுருங்கி விட்டதால் அதற்கு சிகிச்சை அளிக்கவே அதை பிடிக்க முயற்சிப்பதாகவும், ஏற்கனவே துளை சுருங்கி உள்ள நிலையில், மயக்க மருந்து செலுத்தினால் மூச்சு திணறல் ஏற்படும் என்பதற்காகவே வழி நெடுக உணவுகள் வைத்து யானையை அழைத்து சென்றதாகவும், யானைக்கு சிகிச்சை அளிப்பதை தடுக்க தொண்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.