சென்னை:தமிழ்நாட்டில் பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மாநில மையக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
இதில் மையக் குழு உறுப்பினர்களான ஹெச். ராஜா, நயினார் நாகேந்திரன், பொன். ராதாகிருஷ்ணன், வி.பி.துரைசாமி, சி.பி.ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் உள்ளிட்ட 11 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி, மாநில நிர்வாகிகள் மாற்றம், அரியலூர் சிறுமி மரணம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
வடுகபாளையம் சிறுமி மதமாற்றமா?
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச். ராஜா, அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் 3லிருந்து 4 பிரச்னைகள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அரியலூர் வடுகபாளையம் சிறுமி மதமாற்றத்திற்காக 2 ஆண்டுகள் முன்பு பள்ளி நிர்வாகத்தால் நிர்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக மாநில மையக் குழுக் கூட்டம் அவருக்கு மதமாற்ற நெருக்கடி கொடுக்கப்பட்டதற்கு 10ஆம் வகுப்பில் 489 மதிப்பெண் பெற்றதும் ஒரு காரணம்.
கிறிஸ்தவ மதம் மாறினால் இலவச கல்வி , கன்னியாஸ்திரி ஆக்குவோம் என்று கூறி நெருக்கடி தந்துள்ளனர். அந்தச் சிறுமியை அறைகள், கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்லிக் கஷ்டப்படுத்தியுள்ளனர்.
நீதிபதி வாக்குமூலம் பெற்ற ஆடியோ ஏன் வெளியிடப்படவில்லை, தஞ்சை காவல் கண்காணிப்பாளர், குழு அமைத்து ஒரு வாரத்தில் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதாகக் கூறியதுடன் சிறுமி மரணத்தில் மதமாற்றப் பிரச்னை இல்லை என்றும் கூறியுள்ளார். இது தவறு. அவரைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
ஆண்டர்சன் பள்ளியில் அவமதிப்பு
சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் ஆண்டர்சன் பள்ளியில் திருநீறு, ருத்திராட்சம் அணிந்ததை ரவுடி போல இருப்பதாகக் கூறி இரண்டு மாணவர்களை அவமதித்துள்ளார், பள்ளி ஆசிரியர் ஒருவர்.
மதமாற்றத் தடைச் சட்டம்
அனிதாவுக்காக கூச்சல் போட்டோர் இப்போது எங்கே உள்ளனர். கிறிஸ்தவப் பள்ளிகள் மதமாற்றக் கேந்திரமாக மாறி விட்டன, மதமாற்றத் தடைச்சட்டம் வேண்டும்.
காந்தியே மதமாற்றம் தடை குறித்துப் பேசியுள்ளார். மதமாற்றத்திற்கு எதிராக பாஜக ஆதரவுடன் இந்து அமைப்புகள், மக்கள்திரள் அமைப்பை ஏற்படுத்துவோம் .
மதுரையில் 150 ஆண்டுகள் பழைமையான முனீஸ்வரர் கோயில் இடிக்கப்பட்டுள்ளது. சட்டம் பயின்றவர்கள்தான் அமைச்சர்களாக உள்ளனரா என சந்தேகமாக உள்ளது.
பட்டா இடத்தில் இருக்கும் கோயில்களும் இடிக்கப்படுகின்றன. ஸ்டாலின் ஆட்சி அமைந்தவுடன் பல இந்துக் கோயில்கள் இடிக்கப்படுகின்றன.
வெற்றி மமதையில் திமுக
2 விழுக்காடு வித்தியாசத்தில்தான் திமுக ஆட்சி அமைத்தது, திமுகவிற்கு மமதை வேண்டாம். பொங்கல் பரிசில் மிளகுக்குப் பதிலாக இலவம் பஞ்சு, பப்பாளி விதைகள் இருந்திருக்கின்றன. நல்ல வேளை எலி புழுக்கை இல்லை. உச்சி முதல் பாதம் வரை ஊழல் கட்சி திமுக.
கொலை வெறியோடு செயல்படுகிறது ஸ்டாலின் அரசு, திருத்தணி நந்தன் மகன் குப்புசாமி தற்கொலை அதைத்தான் காட்டுகிறது. சக்கரபாணி மேல் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும்.
குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் அரசாக இருக்கிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் கலப்படமே இல்லை என அமைச்சர் சொல்கிறார். முதலமைச்சர் தவறு இழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்.
அரசியலாகும் மரணங்கள்
கிறிஸ்தவ மதமாற்றத்திலிருந்து உயிர் தப்பிய பல பெண்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். ஸ்டாலின் ஆட்சியில் இந்துக்கள் மிரட்டப்படுகின்றனர். பிரின்ஸ் கஜேந்திரபாபு தூண்டுதலால் அனிதா மரணம் அரசியலாக்கப்பட்டு போராட்டம் நடந்தது.
மணப்பாறையில் ஆழ்துளையில் விழுந்து இறந்த குழந்தை (சுஜித்) கிறிஸ்தவக் குழந்தை என்பதால் பணம் கொடுத்தனர். அரியலூர் குழந்தை இந்து என்பதால் யாரும் ஏதும் தரவில்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு - நிதின் கட்கரிக்கு ஸ்டாலின் கடிதம்