அண்ணா பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் தங்கிப் படித்த ஆறு மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களை கிண்டி கிங் கரோனா மருத்துவமனைக்கு கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் இனியன் அனுப்பிவைத்தார். மேலும் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் இனியன், “அண்ணா பல்கலைக்கழகத்தில் 550 மாணவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆறு மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் கிண்டி கிங் கரோனா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர். மாணவர்கள் ஒரு வாரம் சிகிச்சைப் பெற்ற பின்னர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர். இதனால் பெற்றோர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.
மக்கள் நல்வாழ்வுத் துறையிலிருந்து அலுவலர்கள் வருகைபுரிந்து மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். மேலும், உணவகங்கள் மூடப்பட்டு விடுதியில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
இறுதி ஆண்டு மாணவர்கள் செய்முறைத் தேர்வை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் கூறிய அறிவுரையின்படி ஏழாம் தேதிமுதல் கல்லூரிக்கு வந்தனர். அவர்களுக்கு ஒரு வாரம் எந்தவித அறிகுறியும் தெரியவில்லை. தற்பொழுது வைரஸ் தொற்றுக்கு உள்ளான மாணவிகளும் எந்தவித அறிகுறியும் இல்லாமல்தான் இருக்கின்றனர். செய்முறைத் தேர்வினை முடித்துவிட்டு ஒரு வாரத்தில் மாணவர்கள் வீட்டிற்குச் செல்லலாம்” என்றார்.
கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் மேலும், “நாங்கள் யாரையும் கல்லூரிக்கு வர வேண்டும் என்று கட்டாயம் செய்யவில்லை. மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு மேற்கொள்ளப்படுவதில்லை. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...உலக வரைபடத்தை மாற்றியமைத்த வீரர்களுக்கு வெற்றி தின வாழ்த்துகள் தெரிவிக்கும் தலைவர்கள்