சென்னை: தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்காக போட்டித் தேர்வு, நேர்காணல் நடத்தப்படுகிறது.
கரோனா தொற்று காரணமாக பல்வேறு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கான தேதி நாளை (பிப்ரவரி 18) மதியம் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இளநிலை பட்டப்படிப்பு முடித்திருந்தால் குரூப் 2, 2ஏ தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். குரூப்-2 காலிப்பணியிடங்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என்று மூன்று நிலைகளின் கீழ் நிரப்பப்படும். நேர்காணல் அல்லாத குருப் 2ஏ பணியிடங்களுக்கும் நாளை அறிவிப்பு வெளியாகிறது.
இந்த இரண்டு தேர்வுகள் மூலம் சார் பதிவாளர், வருவாய் உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சிறைத் துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளைநிலை வேலைவாய்ப்பு அலுவலர், டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.
இதையும் படிங்க:TNPSC Exams: ஆராய்ச்சி உதவியாளர் எழுத்துத்தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு