சென்னை: தியாகராய நகரைச் சேர்ந்தவர் அஸ்மத் அலி. இவர் அப்பகுதி உள்பட அதனைச் சுற்றியுள்ள இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட பிரியாணி கடைகளை வைத்து கடந்த 10 ஆண்டுளாகத் தொழில் நடத்திவருகிறார்.
சமீபத்தில் தி.நகர் ராமேஷ்வரம் சாலை நமஸ்கிரதம் பிளாட் என்ற இடத்தில் பிரியாணி கடை ஒன்றை தொடங்கி நடத்திவருகிறார். கடந்த 8ஆம் தேதி இந்தக் கடைக்கு வந்த நபர் ஒருவர் கிரில் சிக்கன் ஒன்றை வாங்கிச் சென்றார்.
பிரியாணி கடையில் தகராறு
பின்னர் 1 மணி நேரத்திற்குப் பிறகு கடைக்கு வந்த அவர், தான் வாங்கிச் சென்ற கிரில் சிக்கன் நன்றாக இல்லை எனவும், கெட்டுப்போன சிக்கன் கொடுத்து ஏமாற்றுகிறீர்கள் எனத் தகராறில் ஈடுபட்டார். அப்போது கடையில் இருந்த அஸ்மத் அலியின் மகனும், சட்டக்கல்லூரி மாணவரான முகமது அர்ஷத் இதனைத் தட்டிக்கேட்டார்.
உடனடியாக அந்நபர் அங்கிருந்து சென்று 10-க்கும் மேற்பட்டவர்களை அழைத்துவந்து முகமது அர்ஷத் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார். இதனைத் தடுக்கவந்த பொதுமக்களையும் தள்ளிவிட்டு சரமாரியாகக் கற்களைக் கொண்டு தாக்கினர். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தனர்.
குற்றவாளிக்குச் சிறை
பின்னர் சம்பவ இடத்திற்கு மாம்பலம் காவல் துறையினர் வந்தனர். காவல் துறையினரைக் கண்ட அந்தக் கும்பல் அங்கிருந்து சிதறி ஓடியது. அவர்களை விரட்டிய காவல் துறையினரிடம் சம்பவத்திற்குக் காரணமானவரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
தகராறில் ஈடுபடும் சிசிவிடி காட்சி விசாரணையில் அவர் தி.நகர் ராஜபிள்ளை தெருவைச் சேர்ந்த ஜெகன் (28) என்பது தெரியவந்தது. பின்னர், அவரைக் கைதுசெய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது பிரியாணி கடை உரிமையாளரின் மகனை கும்பல் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வேலூர் சிறையில் விசாரணை கைதி மீது தாக்குதல்?