சென்னை:பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, ஜூலை-2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (ஜூலை 09) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.