சென்னை:கோடம்பாக்கத்தில் உள்ள மின் நிலையத்தை, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (நவ. 12) காலை ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, “சென்னையில் 66 ஆயிரம் மின் இணைப்புதாரர்களுக்கு மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டு 38 ஆயிரம் இணைப்புதாரர்களுக்கு தற்போது வரை மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. எஞ்சியிருக்கும் 28 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 2015, 2016 ஆண்டுகளில், பருவ மழையால் ஏற்பட்ட மின்சாரா தட்டுபாடு இரண்டு வாரம் கழித்தே சரி செய்த நிலையில், தற்போது மழை நின்ற உடன் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காலஅவகாசம்
மழை பாதிப்பால் அனல்மின் நிலையத்தில் சுமார் 400 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் விதமாக, தூத்துக்குடி மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (நவ.12) பிற்பகல் சென்னை அனல்மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கப்படும்.
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு மின்சார வாரிய அலுவலகங்களுக்கு இன்று (நவ.12) அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒருங்கிணைந்த நிலவியலாளர் பணிக்கான ஹால் டிக்கெட் வெளியீடு