பொது போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட 8 நிறுவனத் தயாரிப்புகளின் ஜி.பி.எஸ். கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என்ற தமிழ்நாடு போக்குவரத்து துறை உத்தரவுக்கு எதிராக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்மார்ட் மொபிலிட்டி அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அம்மனுவில், “பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, வாகனங்கள் செல்லக்கூடிய இடங்களின் புவியிடத்தை கண்டறிய ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என்று கடந்த 2018ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுத்துறை வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், ரிக்ஷாக்கள் தவிர அனைத்து பொது போக்குவரத்தில் உள்ள வாகனங்களுக்கும் பொறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தக் கருவிகளை குறிப்பிட்ட 8 நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
140க்கும் மேற்பட்ட ஜி.பி.எஸ். விற்பனை கம்பெனிகள் உள்ள நிலையில் தன்னிச்சையாக, வெளிப்படைத்தன்மை இல்லாமல் குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சட்ட விரோதமானது. எனவே, இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.