சென்னை: முன்னாள் முதலமைச்சரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவத்தில் பிரம்மாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது.
கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்த நவீன ஒளிப்படங்களும் அந்த நினைவிடத்தில் அமைகிறது.
இந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் நடுக்கடலில் ரூ.80 கோடி செலவில் பிரம்மாண்ட வடிவம் ஒன்றை 134 அடி உயரத்திற்கு அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரம்மாண்ட பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.