தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனிடையே தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், "தமிழர் வாழ்விற்கு மகிழ்ச்சியூட்டும் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொங்கல் விழாவானது அறுவடையின் சிறப்பைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விற்கு மிகவும் உறுதுணை புரிகின்ற ஆற்றல், உயிர்ப்பு ஆகியவற்றை நமக்கு வழங்கிடும் சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. மேலும், வேளாண் மக்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றிடும் வகையில் எழுச்சியுடன் தமிழர்களால் கொண்டாடப்பட்டுவருகின்றது.