தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்திற்கான தரவரிசைப் பட்டியலை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெளியிட்டார். அப்போது முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு அவர் சேர்க்கை ஆணையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ மீனவக் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவின் கீழ் 5% உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில், மீன்வள அறிவியல் படிப்பிற்கு 6 இடங்களும், மீன்வளப் பொறியியல் படிப்பிற்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவித் தொகைகளையும் மீன்வள நலவாரியமே ஏற்றுக்கொள்ளும். இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகள், கடலுக்குச் சென்று காணாமல் போனோரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
நல்லபொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்து, தானும் கெட்டு நாட்டையும் கெடுத்தவர்கள் திமுக வினர். அவர்கள் குறட்டை விட்டதோடு, கோட்டையையும் விட்டவர்கள். ஆனால், அதிமுக மக்களோடு மக்களாக வாழ்ந்து பழகிய கட்சி. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு திமுக வினர் நினைத்திருந்தால் அப்போதே தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் இப்போது நாடகம் ஆடுகின்றனர். 7 பேர் விடுதலையில் அதிமுக உறுதியாக உள்ளது. விரைவில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம்.