மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை நடத்தும் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், 'தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். சிறப்பாக செயல்படும் கவர்னருக்கு அரசு விருது வழங்கவேண்டுமென அவர் வேடிக்கையாகக் கூறினார்.
இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அலுவலர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்க வேண்டுமெனவும் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக்கொண்டார். இந்தக் கணக்கெடுப்பு மூலம் தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழில் நிறுவனங்கள், இதர நிறுவனங்கள் மற்றும் வீடு வீடாகவும் சென்று சேகரிக்கப்படும். நிலையான ஒரு இடத்திலிருந்து இயங்காத சிறு நிறுவனங்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்படும்.
இந்தப் பொருளாதாரக் கணக்கெடுப்பில் முதன்முறையாக முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையிலேயே தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. மேலும் தொழிற் கூடங்களின் இருப்பிடங்கள் குறித்தும் தகவல் சேகரிக்கப்படுகிறது. நாட்டின் ஜிடிபி-யில் 50 விழுக்காடு அமைப்புசாரா தொழில்களிலிருந்தே வருகிறது. நாட்டிலுள்ள 90 விழுக்காடு தொழிலாளர்கள் அமைப்புசாரா துறைகளிலேயே பணியாற்றிவருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடத்தப்படும் பொருளாதாரக் கணக்கெடுப்பு மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற கொள்கைகளையும் திட்டங்களையும் மத்திய மாநில அரசுகளால் வகுக்க முடியும்.
பொருளாதார கணக்கெடுப்பு தொடக்க விழா இந்நிகழ்ச்சியில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறைச் செயலாளர் பிரவீன் ஸ்ரீவஸ்தவா, தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் கூடுதல் இயக்குநர் ஏ.கே. டோப்ரானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 2013ஆம் ஆண்டு தமிழகத்தில் எடுக்கப்பட்ட பொருளாதாரக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 5.85 விழுக்காடு தொழில்நிறுவனங்கள் இருப்பதும், பதிமூன்று கோடி தொழிலாளர்கள் இருப்பதும் தெரியவந்தது.