சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என். ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளதாக அரசியல் கட்சித்தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மேலும் நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து, நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்கள் குறித்து கோரிக்கைகளை வைத்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று(7.4.2022) காலை சென்னையில் இருந்து விமானம் முலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் 2 நாட்கள் தங்கி இருந்து உள்துறை அமைச்சர் உள்பட பலரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பயணத்தை முடித்து விட்டு 9ஆம் தேதி இரவு சென்னை திரும்புகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று திரும்பிய 5 நாட்களில் ஆளுநர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆளுநரை திரும்பக் பெறக்கோரி திமுக நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பியது; ஆளுநருக்கும், ஆளும் கட்சிக்கும் இடையே பனிப்போர் நடைபெறுவதையே சுட்டிக்காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : 'இலங்கைத் தமிழர்களுக்கு உதவத் தயார்': மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் போனில் பேசிய முதலமைச்சர்