சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை கல்லூரியில் 13ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு 669 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் கூறினார். பின் தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு சமூக மாற்றத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றத்தை கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக மருத்துவ சேவையில் கிராமப்புறங்களில் 58 விழுக்காடு தனியார், 22 விழுக்காடு அரசு மருத்துவமனைகளும், நகர்ப்புறங்களில் 32 விழுக்காடு அரசு மருத்துவமனைகளும் செயல்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இதனால் உள், வெளி மாவட்டங்களிலும் வந்து இங்கு பயன் பெறுகின்றனர், ஆகையால் தமிழ்நாடு மருத்துவ சுற்றுலாவுக்கான இடமாக மாறிவருகிறது என புகழாரம் சூட்டினார்.
மருத்துவத் துறையை பொறுத்தமட்டில் தமிழ்நாட்டில் நோயாளிகள் மன நிறைவு, மருத்துவ வேலைவாய்ப்பு தகுந்த நேரத்தில் மருத்துவ உதவி என அனைத்தும் முறையாக கிடைக்கப்பெறுகிறது என தெரிவித்தார்.
பட்டம்பெற்று மருத்துவ சேவை செய்யக்கூடிய மருத்துவர்கள் தனித்திறமையுடன் கூடிய மனிதநேய தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கினார்.
'தமிழ்நாட்டில் மருத்துவம் சுற்றுலாவுக்கான இடமாக மாறிவருகிறது'-பன்வாரிலால்