இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை 53 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,868 ரூபாயாகவும், சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலை 53 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,888 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மிகமிகக் குறைவான இந்த விலை உயர்வு, உழவர்களின் துயரங்களை எந்த வகையிலும் தீர்க்காது.
2019-20ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு 1,782.21 ரூபாயாகும். 2020-21ஆம் ஆண்டில் நெல் சாகுபடி செலவு ஐந்து விழுக்காடு உயர்வதாக வைத்துக்கொண்டால், நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு 1,871.32 ரூபாயாக இருக்கும்.
அத்துடன், 50 விழுக்காடு லாபம் 935.66 ரூபாய் சேர்த்து, ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலையாக 2,806.98 ரூபாய் நிர்ணயிக்கப்படுவதுதான் நியாயமானதாக இருக்கும். இதில் எப்படி 50 விழுக்காடு லாபம் கிடைக்கும் என மத்திய அரசு கூறுகிறது என்பது தெரியவில்லை.