சென்னை: தமிழ்நாட்டுக்குள் எந்த ஒரு நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடமுடியாதவாறு தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அரசிதழில், செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலத்துக்குள், ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாவது, 'சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற தலைமைச்செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும். ஆணையத்தின் உறுப்பினர்களாக IT வல்லுநர், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுநர் ஆகியோர் இருப்பார்கள்.
மேலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்குவது, தொடர்ந்து கண்காணிப்பது, தரவுகளை சேகரிப்பது, குறைகளுக்குத் தீர்வு காண்பது, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளும்.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு ஊடகங்களிலும், செயலிகளிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் வெளியிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.