இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், “ கரோனா வைரஸ் தொற்று காரணமாக, பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிமுறைகளின்படி, பருவத்தேர்வு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் வகுப்பதற்கு குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மாணவர்களின் நலன் கருதி மதிப்பெண்கள் வழங்கி இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாணவர்கள் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அடுத்த ஆண்டிற்குள் செல்ல அரசு அனுமதி அளிக்கிறது. அதேபோன்று, முதல் மற்றும் இரண்டாமாண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்கள் மற்றும் பலவகை தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவர்கள், முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு, இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு படிக்கும் மாணவர்கள் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், எம்சிஏ முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதமும், இந்தப் பருவத்தில் அகமதிப்பீடு அல்லது தொடர்ச்சியான மதிப்பீட்டில் இருந்து 70 சதவீதம் மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, 100 சதவீத மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு முதன்மை பாடங்களுக்கும், மொழிப் பாடங்களுக்கும் மதிப்பெண்கள் அளிக்கப்படும்.