சென்னை:சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கையாளத் தெரியவில்லை என பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ராஜேஷ் தாஸ் அப்பிரிவிற்கே ஏடிஜிபி ஆக நியமிக்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ்ஸை தமிழ்நாடு அரசு பணியிடமாற்றம் செய்துள்ளது. இவர் வணிகவரித்துறை செயலாளர் பீலா ராஜேஷின் கணவர் ஆவார். கடந்த 1989 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த ராஜேஷ் தாஸ், ஐஜியாக பதவி உயர்வு பெற்று, சென்னை புறநகர் காவல் ஆணையர், கடலோர பாதுகாப்பு மற்றும் தென் மண்டல ஐஜி ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு முன், அமலாக்கப்பிரிவில் ஏடிஜிபியாக அவர் பணியாற்றி வந்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு, தென்மண்டல ஐஜியாக இவர் இருக்கும் போதுதான், பசும்பொன் முத்துராமலிங்கம் குருபூஜையில் உதவி ஆய்வாளர் உட்பட ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட கலவரம், 5 பேர் கொல்லப்பட்ட பரமக்குடி கலவரம், முல்லை பெரியாறு விவசாயிகள் பிரச்சனை மற்றும் கூடங்குளம் அணுஉலை பிரச்சனை ஆகியவை நிகழ்ந்தன.
அப்போது பெரும் பரபரப்பான இப்பிரச்சனைகளை முறையாக கையாளவில்லை என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், ராஜேஷ் தாஸை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்தது. இவரது மனைவியும், வணிகவரித்துறை செயலாளருமான பீலா ராஜேஷ் மீதான சொத்து குவிப்பு புகாரை விசாரிக்க, மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்புதான் அனுமதி அளித்தது.