தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூய்மையற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறது அரசு - ஓபிஎஸ் கண்டனம் - clean cities in tamilnadu

தூய்மையற்ற மாநிலமாக தமிழ்நாட்டை திமுக அரசு மாற்றிக்கொண்டிருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூய்மையற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது அரசு - ஓபிஎஸ் கண்டனம்
தூய்மையற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது அரசு - ஓபிஎஸ் கண்டனம்

By

Published : Oct 3, 2022, 4:20 PM IST

சென்னை: திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ 'சுத்தம் சோறு போடும்', 'கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக்குடி' போன்ற பழமொழிகள் தூய்மையின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

தூய்மை என்பது உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இருக்கும் இடம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறமும் தூய்மையாக இருந்தால்தான் நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை நாம் அனைவரும் பெற முடியும். இதன் அவசியத்தை உணர்ந்துதான் தூய்மை இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு. ஆனால், இதில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதாகச்செய்திகள் வந்துள்ளது மன வருத்தத்தை அளிக்கிறது.

திடக்கழிவு மேலாண்மை, பொதுக்கழிப்பிடங்களின் தூய்மை, தெருக்களில் அசுத்தம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களால் அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது உள்ளாட்சி அமைப்புகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையினை மத்திய அரசு வெளியிட்டது.

இதில், பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு இடையிலான தூய்மை நகரங்கள் போட்டியில், மொத்தம் 45 நகரங்கள் இடம்பெற்றதாகவும், இதில் மதுரை 45ஆவது இடத்திலும், சென்னை 44ஆவது இடத்திலும், கோயம்புத்தூர் 42ஆவது இடத்திலும் உள்ளன.

தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமை உள்ளிட்ட அசுத்தம் குறித்து அளிக்கப்படும் புகார்கள் மீதான சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையிலான போட்டியில் தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு உள்ளாட்சி அமைப்பும் இடம்பெறவில்லை. இதற்கு திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம். இது கடும் கண்டனத்திற்குரியது.

சென்னையில் பல இடங்களில் குப்பைத்தொட்டிகள் நிரம்பி வழிகின்ற புகைப்படங்கள் பத்திரிகைகளில் அன்றாடம் வெளி வந்த வண்ணம் உள்ளன. இதன்காரணமாக குப்பைகளை வேறு வழியின்றி தொட்டிக்கு வெளியே கொட்டும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. இதுதான் கள யதார்த்தம்.

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே இந்த நிலைமை என்றால், வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும். இதன்மூலம் சுகாதாரக்கேடுகள் ஏற்பட்டு, தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகும். இதன்மூலம், மக்களின் ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்படும். இது நாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல.

டெண்டரில் தான் தூய்மை கடைபிடிக்கப்படுவதில்லை. தூய்மையிலாவது தூய்மையை கடைபிடிக்க வேண்டும். முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகள் நிரம்பி வழியாத வகையில் உடனுக்குடன் அதில் உள்ள குப்பைகளை எடுக்கவும்,

தூய்மையின்மையால் வரும் நோய்கள் குறித்தும், தூய்மையின் முக்கியத்துவம் குறித்தும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தூய்மையில் சிறந்த நாடு தமிழ்த்திருநாடு என்ற சிறப்பினை தமிழ்நாடு பெறவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்த ஆளுநர் ஆர்.என். ரவி

ABOUT THE AUTHOR

...view details