தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 5, 2022, 7:41 PM IST

ETV Bharat / city

அரசுப்பள்ளியின் வசதிகள், அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் உள்ள வசதிகளை எடுத்துக்கூறியும், அரசின் திட்டங்களையும் எடுத்துக்கூறியும் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தொடக்கக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

government
government

சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 13ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌பள்ளிகளில்‌ 2022-23ஆம்‌ கல்வியாண்டில்‌ மாணவர்‌ சேர்க்கைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் "தமிழ்நாட்டில் பள்ளிகளில் சேராத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். 86ஆவது சட்டத்திருத்தத்தின் படி தொடக்கக் கல்வி, அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.

மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்க்க வேண்டியது கடமையாகும். பள்ளி அமைந்திருக்கும்‌ குடியிருப்புப் பகுதிகளில்‌ உள்ள 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களை 100 விழுக்காடு அரசுப்‌பள்ளிகளில்‌ சேர்ப்பது தலைமை ஆசிரியர்‌ மற்றும்‌ உதவி ஆசிரியரின்‌ தலையாயக் கடமையாகும்‌.

பள்ளியின்‌ சாதனைகள்‌, வளர்ச்சி, பல்வேறு வகையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்‌, கல்விமுறை, பாதுகாப்பு குறித்து பெற்றோர்‌ ஆசிரியர்‌ கூட்டம்‌ மற்றும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்டத்தின்‌ மூலமாக பெற்றோர்களிடம்‌ எடுத்துக் கூறலாம்‌. ஸ்மார்ட் கிளாஸ் செயல்பாடுகள்‌ உள்ளிட்டவை குறித்து பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துக்‌ கூற வேண்டும்‌. தனியார்‌ பள்ளிகளுக்கு நிகரான இணைய வழிப் பாட கற்பித்தல்‌ பற்றியும்,‌ வாட்ஸப் வழியாகவும் ஆசிரியர்‌ மாணவர்‌ பாடப் பரிமாற்றங்கள்‌ பற்றியும்‌ பெற்றோர்களுக்கு விரிவாகவும்‌ தெளிவாகவும்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌.

அரசு வழங்கும் சிற்றுண்டி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கலாம். இல்லம்‌ தேடிக்‌ கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள்‌ வீடு வீடாகச் சென்று கண்டறிந்த 5 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க உதவிட வேண்டும்‌. இந்த வழிமுறைகளைப்‌ பின்பற்றி 2022-23ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: எந்திரம் மூலம் ரூ.10-க்கு மஞ்சள் பை வழங்கும் திட்டம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details