சென்னை:அரசு மருத்துவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் வரும் 25ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பின் சார்பில் பாலகிருஷ்ணன், சாமிநாதன், அகிலன், சுந்தரேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையான அரசாணை எண் 354 மறுவரையறை, கடந்த 2017ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய காலமுறை ஊதியப்பட்டை இன்று வரை நடைமுறைப்படுத்தாதது அரசு மருத்துவர்கள் இடையே மிகப்பெரும் வருத்தத்தையும், மனச்சோர்வையும் தந்துள்ளது.
பிற துறை மருத்துவமனைகள் கூட தயங்கிய நிலையில், மிகப்பெரிய கரோனா பேரிடரை அரசு மருத்துவர்கள் தியாக உணர்வோடும், அர்ப்பணிப்போடும் எதிர்த்து நின்று வெற்றி கண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மகுடம் சேர்த்தனர். மருத்துவர்களின் கோரிக்கைகளை கடந்த ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டபோது நேரடியாக வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்ததுடன், ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் எனவும் அறிவித்தார்.
இந்த நிலையில் ஆட்சிக்கு வந்தபின்னரும், தமிழ்நாடு அரசு அரசாணை 354 மறுவரையறை செய்ய காலதாமதம் செய்கிறது. பொது சுகாதாரத்துறையில் எவ்வித நியாயமான அடிப்படையோ அறிவியல் காரணமோ இல்லாமல் தொழிலாளர் விதிகளுக்குப் புறம்பான வகையில் மருத்துவர்களின் பணி நேரத்தை நீடிக்கும் விதமாக அரசாணை எண் 225 வெளியிட்டு உள்ளது.