இதுதொடர்பாக இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தேவாலயங்களுக்கு 5 கோடி ரூபாயும், மசூதிகளுக்கு 5 கோடி ரூபாயும் பழுது பார்க்க ஒதுக்கியுள்ளது. இது முன்னர் 60 லட்சமாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டுகிறது. தமிழக பட்ஜெட்டில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ள நிலையில், ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்றி உள்ள நிலையில், தேவாலயங்கள், மசூதிகளின் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கக் காரணம் என்ன?
மசூதிக்கோ, சர்ச்சுக்கோ வருகின்ற நிதி, வருமானம் எவ்வளவு என்பதுகூட தெரிந்துகொள்ளாமல், தமிழக அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதேசமயம், இந்துக் கோயில்களின் சொத்துகளை தனது இரும்புப் பிடியில் வைத்துள்ள தமிழக அரசு, கோயில் நிலங்களை பட்டாப்போட்டு கொடுக்கவும், நாத்திகவாதி அண்ணாதுரையின் இறந்த நாளைக்கு சமபந்தி போஜனம் போன்றவற்றால் சீரழிக்கவும் செய்கிறது. பல்லாயிரம் கோயில்கள் சீரழிந்து வருவதை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், கோயில் வருமானத்தை, நிர்வாக செலவினங்கள் என்ற பெயரில் சுரண்டி வருகிறது.