சென்னை: தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து எழுதியுள்ள கடிதத்தில், ’தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரா- தமிழ்நாடு எல்லைப் பகுதியான சித்தூர் மாவட்டத்தின் வழியாக ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுகிறது. அதேபோல், வாணியம்பாடி, தும்பேரி, பேர்ணாம்பட்டு உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது.
ரேஷன் அரிசி கடத்தலுக்கு இரு சக்கர வாகனங்கள் முதல் லாரிகள் வரைப் பயன்படுத்தப்படுகின்றன. எனது குப்பம் தொகுதிக்கு வரும் ரேஷன் அரிசி கடத்தல் வாகனங்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனர். இதனால் எனது குப்பம் தொகுதியில் மட்டும் 16 மாதங்களில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.