கரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் நடைபெற்றது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார்.
பெரியார் காண விரும்பிய சுய மரியாதை சமூகம்
அப்போது பேசிய அவர், நீட், வேளாண் சட்டங்களை ரத்துசெய்தல், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை, இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை, நிதித் துறை வல்லுநர்கள் அடங்கிய குழு எனப் பல்வேறு முக்கிய அம்சங்களை அறிவித்தார்.
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் தொடர்ந்து பேசிய அவர், "தந்தை பெரியார் காண விரும்பிய சுய மரியாதை சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும், தமிழ்நாட்டை மாற்ற இந்த அரசு உறுதியேற்றுள்ளது. சமூக நீதி, சமத்துவத்தை அடித்தளமாகக் கொண்ட அரசாக இந்த அரசு செயல்படும்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்
அனைத்து மக்களும் சேர்ந்த எமது அரசு என்ற பெருமையோடு நெஞ்சு நிறைந்து சொல்லும் வகையில் திமுக அரசு தனது பயணத்தை தொடரும். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாவின் பொன்மொழிக்கு ஏற்ப திமுக அரசு செயல்பட்டுவருகிறது.
கருணாநிதியின் உழவர் சந்தை திட்டம்
தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு கொள்கை, காலத்தை வென்று சமூக நீதியை உறுதிசெய்துள்ளது. இந்த வகையில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 24ஆம் தேதி வியாழன் வரை 3 நாள்கள் நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆளுநர் உரை மீதான விவாதம் நாளை தொடங்குகிறது.
இதையும் படிங்க:'நீட், வேளாண் சட்டம் ரத்து, தமிழுக்கு முன்னுரிமை, நிதித் துறை குழு' - ஆளுநர் உரை