சென்னை: சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை சென்னை, டெல்டா பகுதிகளில் கொட்டித் தீர்த்தது. இதுவரை இல்லாத அளவு தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் (நவம்பர் 25) மழை பெய்துள்ளது. தூத்துக்குடியில் இதுவரை இல்லாத அளவில் கன மழை பெய்துள்ளது. இது குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய வசதியாக இருக்கும்.
முதலமைச்சர் ஆலோசனை
இது தொடர்பான மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாவட்டங்களில் உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் கடந்த நவம்பர் 24ஆம் தேதி ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும், வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட சேத விவரங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பி நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
மாஞ்சோலை பகுதியில் 20 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் பாபநாசம் அணை நிரம்பியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் இருக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 109 முகாம்களில் ஒன்பதாயிரத்து 903 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் 14 முகாம்களில் 639 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.