சென்னை:அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளி சிறப்புப் பிரார்த்தனை இன்று (ஏப். 15) காலை முதல் நடைபெற்று வருகிறது. புனித வெள்ளி, அடிப்படையில் ஒரு துக்க நாள். கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். புனித வெள்ளி இயேசு மீண்டும் உயிர்ப்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. மேலும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மவுன ஊர்வலம் சென்றனர்.
கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த மார்ச் 2ஆம் தேதி சாம்பல் புதனன்று தொடங்கியது. தொடர்ந்து 40 நாள்கள் தவக்காலத்தை தொடங்கினர், கிறிஸ்தவ பெருமக்கள். இதனைத்தொடர்ந்து கிறிஸ்தவர்களின் புனித வாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறுடன் தொடங்கியது. சென்னை எழும்பூரில் உள்ள தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற சிலுவைப்பாதை மற்றும் ஆராதனைக் கூட்டத்தில் பெரும்பாலான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.
இந்த திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு மரித்த இயேசுவின் சொரூபம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. "இந்த சொரூபம் 1932ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு 1935ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இங்கு சிறப்புப்பிரார்த்தனைகளும், ஜெபங்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது" என்றார், திருத்தலத்தின் ஊழியர் ஒருவர்.