சென்னை:பசும்பொன்னுக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது பிறந்தநாள் விழாவும், குருபூஜையும் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோர் பசும்பொன் கிராமத்திற்கு சென்றிருக்கிறார்கள். இவ்வேளையில் ‘கோ பேக் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக் கொண்ட பதிவுகள் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்தியாவிற்கும் இந்துக்களுக்கும் எதிரான தீய சக்தி என்று திமுகவிற்கு எதிரான குரல் ஒலித்த வண்ணம் இருக்கின்றது.
முத்துராமலிங்கத் தேவர் உயிர் மூச்சாக நினைத்த தேசியத்தையும் தெய்வீகத்தையும் எதிர்க்கும் திமுக, ஓட்டுக்காக அவருக்கு மரியாதை செலுத்த நினைக்கிறது என குறிப்பிட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வரும் நேரமெல்லாம் அவருக்கு எதிராக ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக்கை தமிழ்நாட்டு மக்கள் ட்ரெண்ட் செய்வார்கள். தற்போது அதேபோல் 'கோ பேக் ஸ்டாலின்' என்ற ஹேஷ்டேக் பதிவுகள் ட்ரெண்டாகி, இந்திய அளவில் பரவிவருவதால், திமுக வட்டாரங்கள் அதிர்ச்சியில் உள்ளது.