சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தஅக்கட்சித் தலைவர் ஜி.கே. வாசன்," வருகிற ஜூலை 12ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை கரோனா தடுப்பு விழிப்புணர்வு நாளாக கொண்டாட இருக்கிறோம்.
இதற்காக வருகிற திங்கட்கிழமை (ஜூலை 5) முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறேன்.
ஒன்றியம் என்பது வீண்
மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களின் துயரைப் போக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று அழைப்பதும், மத்திய அமைச்சரை 'ஒன்றிய அமைச்சர்' என்று அழைப்பது மூலமாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரத்தை மாற்ற முடியாது.
நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பயணித்த போதும், அதற்கான தோல்வியை அனைத்து கூட்டணி கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளோம். வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்.
வெற்றியின் குரல் 'ஜெய்ஹிந்த்'
மத்திய, மாநில அரசுகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இணைந்து தடுப்பு பணியிலும், தடுப்பூசிகள் தடையில்லாமல் அனைத்து மக்களையும் சென்றடையக் கூடிய வகையில் செயல்பட வேண்டும்" எனக் கூறினார்.
ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற சொல் இடம்பெறவில்லை என்ற சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த ஜிகே வாசன், ஜெய் ஹிந்த் என்பது வாழ்க இந்தியா என்றும், அது வெற்றியின் குரல்; தேசத்தின் குரல் என்றும் மறக்கக்கூடாத சொல். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல்வேறு தலைவர்கள் பயன்படுத்திய சொல் ஜெய்ஹிந்த் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்