கோவை எட்டிமடைப் பகுதியில் நேற்று அதிகாலை தண்ணீர் தேடிச் சென்ற ஆண் யானை ஒன்று, எக்ஸ்பிரஸ் ரயில் மோதி படுகாயமடைந்தது. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத் துறையினர் யானையைப் பத்திரமாக மீட்டு, சிகிச்சை அளித்துவருகின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்தில் சுருண்டுவிழுந்த யானையின் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. காணொலியில் யானை வலியுடன் பிளிறும் காட்சி காண்போரை கண்கலங்கச் செய்கிறது. இந்தக் காணொலியைப் பார்த்த நேயா என்னும் 5 வயது குழுந்தை யானை குணமாக வேண்டி அழும் காணொலி தற்போது வைரலாகிவருகிறது.
காணொலியில் குழந்தை நேயா, தனது பிஞ்சுக் குரலில், "இதைப் பார்த்தவுடன் எனக்கு அழுகை அழுகையாக வருகிறது. தயவுசெஞ்சு யானைக்கு சப்போர்ட் பண்ணுங்க" என்று கண்ணீர் மல்க கெஞ்சுகிறார்.
'யானைக்கு சப்போர்ட் பண்ணுங்க' - பிஞ்சுக் குரலில் கெஞ்சும் குழந்தை மேலும், "பாவம்! தண்ணீர் குடித்துவிட்டு வரும்போது ரயில் மோதியுள்ளது. யானைக்கு பழத்தில் பாம் வைக்குறாங்க. அதனால சாப்பிட முடியாம சாமிகிட்ட போயிடுச்சு. அப்புறம் யானைக்கு காதுல தீவைக்குறாங்க. என்னால இதுக்கு மேல சொல்ல முடியல" என்று கண்ணீருடன் புலம்பித் தவிக்கிறது அப்பிஞ்சுக் குழந்தை.
நேயா கோவை போத்தனூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆனந்த் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். ஆனந்த் தன்னுடைய குழந்தை நேயாவுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.