சென்னை: கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (50). இவர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
கோபால கிருஷ்ணன் கடந்த 3ஆம் தேதி கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு குடோனில் இருந்து 25 டன் எடை கொண்ட 640 மூட்டைகளை தமிழ்நாடு வாணிபக்கழக நுகர் பொருள் பணிமனைக்கு கொண்டு செல்வதற்காக ஏற்றிச் சென்று எம்.கே.பி நகர் வடக்கு அவென்யூ பகுதியில் நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
லாரியுடன் காணாமல்போன நெல் மூட்டைகள்
பின்னர் 4ஆம் தேதி காலை லாரியை எடுக்க வந்த கோபால கிருஷ்ணன் நெல் மூட்டைகளுடன் லாரி காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கோபாலகிருஷ்ணன் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அப்பகுதிகளில் உள்ள சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில், லாரி மாதவரம் நோக்கிச் சென்றது தெரியவந்தது.
சிசி டிவி காட்சி மூலம் கண்டறியப்பட்ட குற்றவாளிகள்
அதனடிப்படையில் சிசி டிவி காட்சிகளை பின்தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த ராஜா (44), வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி (23) ஆகிய இருவரும் லாரியை ஓட்டிச் சென்றது கண்டறியப்பட்டது.
அவர்களைக் கைது செய்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த ராஜா (44), செல்வரசு (43) ஆகிய இருவரே கடத்தி வரப்பட்ட அரிசி மூட்டைகளை விற்க முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து அவ்விருவரையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த பிரியா (37) என்ற பெண்ணையும் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து லாரி, அரிசி மூட்டைகளை மீட்டு பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:மைக்கு ஏற்ப பாயிண்டுகள்... உற்சாகத்துடன் நடைபெற்ற தொடுமுறை சிலம்பப் போட்டி!