விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த வீட்டு வேலை செய்துவரும் தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தத் தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதையடுத்து அந்த பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் அவர்கள் சென்னையில் வீட்டு வேலை மற்றும் கட்டட வேலை பார்த்துவந்துள்ளனர். இரண்டு சிறுமிகளும் விழுப்புரத்தில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு விழுப்புரத்திலிருந்த குழந்தைகளை பார்க்க அப்பெண் சென்றுள்ளார்.
அப்போது இரு குழந்தைகளும், தங்களை உறவினர்கள் எட்டு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அழுதுகொண்டே தாயிடம் கூறியுள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அனைவருமே உறவினர்கள் என்பதால், குழந்தைகளின் தாயார் அதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் குழந்தைகளை பாண்டிச்சேரியிலுள்ள அரசு பள்ளியில் சேர்த்துள்ளார்.
அங்கு சேர்க்கப்பட்ட சில நாளிலேயே இரு குழந்தைகளும் உடல்நலம் குன்றி காணப்படவே, அவர்களை விசாரித்த பள்ளி ஆசிரியரிடம் நடந்த விஷயங்களையெல்லாம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர், உடனடியாக இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனடிப்படையில் விழுப்புரம் காவலர்கள் இரு குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்த எட்டு நபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ சிகிச்சை முடிந்ததும் சென்னை சாலிகிராமத்தில் தாயுடன் வசித்துவந்தனர்.