தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்ட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல் - தமிழ்நாடு சட்டப்பேரவை

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்ட வேண்டுமென ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

g ramakrishnan

By

Published : Jun 11, 2019, 3:28 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநில கூட்டம் இன்று தி.நகரில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இதில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்துகொண்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சமீபத்தில் கூடிய கட்சியின் மத்திய குழுவின் முடிவுகள் இந்த கூட்டத்தில் ரிப்போர்ட் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சியின் மாநிலக் குழு தீர்மானிக்க உள்ளது. அதோடு தமிழ்நாட்டில் மக்கள் சந்திக்கக் கூடிய பல்வேறு பிரச்னைகள் தொடர்பாகவும் ஆலோசித்து முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்றார்.

குறிப்பாக, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு 9.18 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இதுவரை வாரியத்தின் முடிவை கர்நாடக அரசு அமலாக்கவில்லை. மேலும் தேர்தல் முடிந்த பிறகு கல்வியில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படும் ஆனால் இந்தி திணிக்கப்படாது எனக் கூறினாலும் வேறு வழியில் இந்தி திணிப்பை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இந்த பிரச்னைகளை எதிர்கொள்ள மாநில அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதோடு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற இருக்கின்றது. மேலும் குடிநீர் பிரச்னைகளை தீர்க்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதேபோல் சுய நிதி பள்ளி, கல்லூரிகளில் அரசு தீர்மானித்த கல்விக் கட்டணத்திற்கு மேல் வசூல் செய்யக் கூடாது என்ற அரசின் தீர்மானத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது போல் சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details