சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக டிசம்பர் 18ஆம் தேதியிலிருந்து ஜனவரி 1ஆம் தேதி வரை சென்ட்ரல், கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி, ஆலந்தூர், கிண்டி, அசோக் பில்லர், திருமங்கலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஃப்யூஷன் தமிழிசை கச்சேரி, பறையாட்டம், பரதநாட்டியம், டிரம்ஸ், நாதஸ்வரக் கச்சேரி, குழந்தைகள் உரிமை குறித்த தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள், ரயில் நிலையங்களில் மட்டுமே நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் டிசம்பர் 21ஆம் தேதி ரயிலுக்குள்ளேயே இசைக்கச்சேரி நடைபெற்றது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களது மனஅழுத்தத்தை மறந்து மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் "ஆன் த ஸ்டிரீட்ஸ் ஆப் சென்னை" என்ற அமைப்பினர் ஆவர். இவர்கள் பொது இடங்களில் வார இறுதி நாட்களில் ஒன்றுகூடி இசைக் கச்சேரி நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே மெட்ரோவிலும் இசைக் கச்சேரி நடத்தினார்கள். வயலின், புல்லாங்குழல், கீபோர்டு உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்து குழுவாக இணைந்து பாடிய இவர்கள் ஒட்டுமொத்த பயணிகளின் கவனத்தையும் ஈர்த்தனர்.