சென்னை: வேட்டி, சேலை வழங்கும் திட்டம் 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் மிகச்சிறந்த திட்டங்களில் ஒன்றாகும்.
மாநிலத்தில் உள்ள 14 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள், 54 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு அளித்தல், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு சேலைகள் மற்றும் வேட்டிகள் அளித்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2021ஆம் ஆண்டு பொங்கல் திட்டத்திற்கு ரூபாய் 490.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 180 லட்சம் சேலைகள், 180 லட்சம் வேட்டிகள் ரூபாய் 517.42 கோடி மதிப்பில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த வேட்டி சேலைகள் 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த 2021-22ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 490.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பொங்கல் 2020 வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்த முதல் தவணைத் தொகை ரூபாய் 157.38 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.