தேனி மாவட்டத்தில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக கட்சிகள் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி - பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதில் மோடி மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்ற காவல் துறையினருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் நகரின் மையப்பகுதியில் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து சாலையில் அமர்ந்தவர்களை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக காவல் துறையினர் தூக்கிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.