தமிழ்நாடு முழுவதும் 'ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' அமைப்புக்குத் தடைவிதித்து அரசாணை வெளியீடு! - சாத்தான்குளம் லாக்கப் மரணம்
13:54 July 08
சென்னை: தமிழ்நாடு காவல் துறைக்கு உதவியாக இருந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைத் தடைசெய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் சிறையிலேயே உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்தனர். இச்சூழலில் இந்த விவகாரத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸூக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. அதன் எதிரொலியாக நெல்லை மற்றும் திருச்சி சரகங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களில் ஃப்ரண்டஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்குத் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸூக்கு தடைவிதிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தன. மேலும் இக்கோரிக்கையை முன்வைத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இச்சூழலில், இன்று இந்த அமைப்பை தமிழ்நாடு முழுவதும் தடைசெய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.