தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரூரில் சமூக ஆர்வலர் கொலை: பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் கண்டனம் - கரூரில் சமூக ஆர்வலர் கொலை

இயற்கை வளங்களைப் பாதுகாக்கப் போராடிய சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொலை செய்யப்பட்டதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 12, 2022, 10:26 PM IST

சென்னை:கரூரில் சட்ட விரோதக் குவாரிகளுக்கு எதிராகவும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் போராடிய ஜெகநாதன் என்பவர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி அதிர்ச்சியையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (செப்.12) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'அண்மைக் காலமாக இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் சுற்றுச்சூழல் விதிகளின் படி, தொழில்கள் நடக்கிறதா? என்பதைக் கண்காணிப்பதிலும் பொதுமக்களின் பங்கு அதிகரித்து வருகின்றன. இப்படியான சூழலில் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் மிரட்டப்படுவதும், கொலை செய்யப்படுவதும் இயற்கை வளப்பாதுகாப்பில் ஈடுபடும் அனைவரையும் அச்ச உணர்வில் தள்ளும்.

கரூர் ஜெகநாதன் கொலை சம்பவம் தொடர்பாக கல்குவாரி உரிமையாளரை காவல் துறை கைது செய்துள்ளது. இக்கொலையில் தொடர்புடைய அனைவரையும் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இவ்வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்தி கொலையாளிகளுக்கு சட்டப்படி, தண்டனை கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் பல்வேறு வகையான கனிமங்களை வெட்டி எடுக்கும் நடவடிக்கைகளுக்கான அனுமதி கோருதல், விண்ணப்பங்கள் பரிசீலனை, அனுமதிகள் வழங்குவது, விதிகளை பின்பற்றுவது போன்ற தகவல்கள் மற்றும் ஆவணங்கள் எதுவும் அரசு தளங்களிலோ, பொது வெளியிலோ கிடைப்பதில்லை. இதனால், குவாரிகள் சம்பந்தமான அத்தனை செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை இல்லாதநிலை தொடர்வதால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகவே தகவல்களைப் பெற முடிகிறது. அந்தச் சட்டத்தின் வாயிலாக தகவல்கள் கேட்பவர்களின் விவரங்கள் கூட சில தவறான அலுவலர்களால் வெளியிடப்பட்டு அவர்கள் மிரட்டலுக்கு ஆளாகின்றனர்.

தென்மாவட்டங்களில் குவாரிகள் செயல்படும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாதாரணமாக நுழையவே முடியாத சூழலும் நிலவுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் கல் குவாரிகள், செங்கல் சூளைகள், ஆற்று மணல் குவாரிகள் தொடர்பான அனைத்து அனுமதிகளையும், ஆணைகளையும் அரசு தளங்களில் வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதோடு, இத்திட்டங்கள் மீதான பொதுமக்கள் கண்காணிப்பும் அதிகரிக்கும்.

அடுத்ததாக, கனிம வளங்கள் எடுக்கப்படும் குவாரிகளைக் கண்காணிப்பதற்காக தற்போது இருக்கும் சட்டங்களில் பல்வேறு போதாமைகள் இருப்பதைக் காண முடிகிறது. இதன் காரணமாகவே, பெரும்பாலான குவாரிகளில் விதிமீறல் நடக்கிறது' எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சோனாலி போகத் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதவுள்ளேன் - பிரமோத் சாவந்த்!

ABOUT THE AUTHOR

...view details