சென்னை: தமிழ்நாடு வணிகவரித் துறைச் செயலர் ஜோதி நிர்மலாசாமி நேற்று (டிசம்பர் 3) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சரக்கு வாகன தணிக்கை- ரூ.5.81 கோடி அபராதம்
"தமிழ்நாட்டில் கடந்த ஐந்து வாரங்களில் வணிகவரித் துறை மேற்கொண்ட சரக்கு வாகனத் தணிக்கையில் (E-way) இ-வே பில் இல்லாமல் பயணித்ததற்காக, ரூ.5.81 கோடி அபராதம் வசூல்செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று வணிகவரித் துறை மூலம் வசூலிக்கப்படும் வரி வருவாய் தொகைகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தமிழ்நாடு அரசு செயல்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு அரசுக்குச் சேர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும்விதத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
வணிகவரித் துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்துப் பணிக் குழுக்களைக் கொண்டு பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களைத் தணிக்கை செய்யும் பணியினைத் திறம்படச் செய்வது போன்ற புதிய பல முயற்சிகள் வணிகவரித் துறையால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.