சென்னை:அண்ணாசாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்வாரிய அலுவலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனையில் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பருவமழையில் பாதிப்பு ஏற்பட்டால் மாற்றியமைப்பதற்காக 14,442 மின்மாற்றிகள், 1,50,992 மின்கம்பங்கள், 12 ஆயிரம் கி.மீ மின் கம்பிகள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து மண்டலங்களிலும் தேவையான பொருட்கள் கையிருப்பில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்த 39,616 மின்கம்பங்கள் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் தரையில் உள்ள மின் பெட்டிகள் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மின்வாரியம் சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது. சென்னை மழைநீர் வடிகால் பணிகள் தொடர்புடைய பணிகள் ஒருங்கிணைந்து நடைபெற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.