சென்னை: போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அண்மையில் நடைபெற்ற TNPSC Group IV எழுத்துத் தேர்வுக்கு இப்பயிற்சி மையங்களால் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டதன் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர்.
தற்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மட்டும் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் இதற்கான விண்ணப்பப் படிவம் ஆகியன www.civilservicecoaching.com என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் மேற்படி இணைய தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய சான்றிதழுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 14-09-2022 வரை தேர்வர்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி மையங்களில் நேரடியாக அளிக்கலாம்.