சென்னை: எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தை இன்று (செப்டம்பர் 28) முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்துவைத்தார். பொதுமக்கள் இந்த மாதம் 30ஆம் தேதிவரை இலவசமாகப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடம் ஆறு கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காவல் அருங்காட்சியகம் 24,000 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது.
இக்காவல் அருங்காட்சியகத்தில், கூடுதல் வசதிகளாக கண்காணிப்பு கேமரா, தீத்தடுப்புச் சாதனங்கள், குடிநீர் வசதி, மழை நீர் சேகரிப்பு வசதி, சிற்றுண்டியகம், நுழைவுச் சீட்டு வழங்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.