சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துவருகிறது.
தொடர் கனமழையால், கடந்த ஐந்து நாள்களாக ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வசந்தம் நகர், ஸ்ரீராம் நகர், சரஸ்வதி நகர் உள்ளிட்ட சுமார் 4,000 வீடுகளில் வெள்ளநீர் முழங்கால் அளவிற்குத் தேங்கியுள்ளது.
தொற்றுநோய் இடர்
குறிப்பாக, ஆவடி வீட்டுவசதி வாரியத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புக்குள் மழைநீருடன், கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதனால், தொற்று நோய் ஏற்படும் இடர் உள்ளதாகவும், வேதனை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, வீட்டைவிட்டு வெளியே வர முடியாத அளவிற்கு அவர்களின் இயல்பு வாழ்க்கை, முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.