சென்னை: உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாகக் கடந்த 24-2-2022 முதல் தமிழ்நாடு அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, அரசு உயர் அலுவலர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 3) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
மீட்புத்தொடர்பான ஒருங்கிணைப்புப்பணிகளைத் தமிழ்நாடு அரசுடன் ஒன்றிணைந்து விரைந்து மேற்கொள்ள ஏதுவாக, ஒன்றிய அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமனம் செய்திடுமாறு முதலமைச்சர், ஒன்றிய அரசைக் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில், ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சக செயலாளர் கே.ராஜாராமனை ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்து, மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணி
தமிழ்நாட்டைச் சார்ந்த 193 மாணவர்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் செலவில் தங்களது சொந்த மாவட்டங்களுக்குச் சென்றடைய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த எஞ்சியுள்ள மாணவர்களை உடனடியாக மீட்பதற்காகக் கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் அறிவுறுத்தல்
- 'உக்ரைன் நாட்டின் கிழக்குப்பகுதியில் அதிகமாகத் தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கியிருப்பதால், அவர்களை ரஷ்ய நாட்டின் எல்லை வழியாக அழைத்து வருவதற்கு ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் தொடர்ந்து தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
- தமிழ்நாட்டு மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து, அவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவித்து, வழிநடத்தி அழைத்து வரவேண்டும்.
- உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் சுலோவாகியா ஆகிய நாடுகளில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்துள்ள தமிழ்நாட்டு மாணவர்களை உடனடியாக சிறப்பு விமானங்கள் மூலமாகத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.