தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆபாசமாக பேசுவதற்கு நேர்காணல் நடத்திய லோன் ஆப் மோசடி கும்பல் - Jail for individual interviewers who abuse

ஆன்லைன் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கும்பலிடம் நடத்திய விசாரணையில், அந்த கும்பல் ஆபாசமாக பேசுவதற்கு நேர்காணல் நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 11, 2022, 1:56 PM IST

சென்னை:ஆன்லைன் லோன் ஆப் மூலம் ஒரு கும்பல் தங்களை தொடர்ச்சியாக மிரட்டி பணம் பறித்துவருவதாக சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதோடு பணத்தை தரவில்லையென்றால் ஆபாசமாக புகைப்படங்களை அனுப்பி மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் போலீசார் கலெக்சன் ஏஜெண்டாக செயல்பட்ட உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தீபக் குமார் பாண்டே, ஹரியானாவை சேர்ந்த ஜிதேந்தர் தன்வர், கும்பலின் தலைவராக செயல்பட்ட நிஷா, மேலாளர் பிரகாஷ் சர்மா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த 4 பேரும் வீட்டில் இருந்தபடியே, 50 பேரை பணிக்கு எடுத்துக்கொண்டு லோன் ஆப் மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் லோன் பெற்ற வாடிக்கையாளர்களின் மார்பிங் செய்த புகைப்படங்களை அவர்களின் உறவினர்களுக்கு அனுப்பி பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் 4 பேரையும் போலீசார் நேற்று (செப்.10) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார், 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கால் சென்டர் பணிக்காக ஊழியர்களை தேர்வு செய்வதுபோல அறிவிப்பு வெளியிட்டு, அந்த நேர்காணலில் ஆபாசமாக பேசினால் பணம் தருவதாக கூறி பணிக்கு சேர்த்ததும். அவர்களை வைத்து பணம் பெறும் வாடிக்கையாளர்களை மிரட்டியும் வந்துள்ளது தெரியவந்தது.

குறிப்பாக, லோன் பெற்ற வாடிக்கையாளர்களை ஆபாசமாகத் திட்டவும், புகைப்படங்களை மார்பிங் செய்யவும் பிரத்யேகமாக நேர்காணல் நடத்தியதும் தெரியவந்துள்ளது. இந்த கும்பல் மோசடி செய்யப் பயன்படுத்திய 47 கூடுதல் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடி கும்பலின் 50-க்கும் மேற்பட்ட லோன் ஆப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஏடிஎம் வழியாக அடிக்கடி ரூ.5 லட்சம் வரை பணப்பரிமாற்றம்: இளைஞரிடம் அமலாக்கத்துறை விசாரணை

ABOUT THE AUTHOR

...view details