சென்னை: அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்புகளில் உள்ள இடங்களில் 25 % பள்ளிக்கல்வித் துறையின் மூலம் முதல் எட்டாம் வகுப்பு வரை படிப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான நிதியை தமிழ்நாடு அரசு தனியார் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது.
இதனைத்தொடர்ந்து தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டுக்குரிய கட்டணத் தொகை 419 கோடி இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர் நலச் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் குடியரசு, மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநரை சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை நவம்பர் 1ஆம் தேதி முதல் திறக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 19 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பள்ளிகளை சீர் செய்யவும் வாகனங்களை பழுது பார்க்கவும்; பள்ளி வளாகத்தை பராமரித்தல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்ள நிதி தேவைப்படுகிறது.