தூத்துக்குடி:தூத்துக்குடியில் ஆ.ராசாவிற்கு எதிராக அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்த காவல் ஆய்வாளர் உட்பட இரு போலீசாரை தாக்கிய பாஜக, இந்து முன்னணியைச்சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திமுகவின் துணை பொதுசெயலாளர் ஆ.ராசாவைக் கண்டித்து கோவில்பட்டி நகரில் பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் நேற்று (செப்.17) நள்ளிரவில் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் அவரது ஓட்டுநர் காவலர் பாண்டி ஆகியோர் அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்து நிறுத்தி போஸ்டரைப் பறித்ததாகத்தெரிகிறது.
அங்கிருந்து காவல் ஆய்வாளர் தனது வாகனத்தில் எட்டையபுரம் சாலையில் உள்ள வ.உ.சி பள்ளி அருகே சென்றபோது, அங்கு வந்த இந்து முன்னணியினர் போஸ்டரை பறித்ததைக் கண்டித்து பாஜக நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் பாஜகவினர், காவல் ஆய்வாளர் சென்ற வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கிய ஆய்வாளர் சுஜித் ஆனந்தை பாஜகவின் கோவில்பட்டி நகர தலைவர் சீனிவாசன், பாஜக நிர்வாகி ரகுபாபு உள்ளிட்ட சிலர் சட்டையைக் கிழித்து தாக்கி காயப்படுத்தியதாகத் தெரிய வருகிறது. இதனைத் தடுக்க முயன்ற காவலர் பாண்டியையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
பின்னர் போலீசார் அவர்களை விரட்டிச்சென்றதில் பாஜக நகர தலைவர் சீனிவாசன், ரகு பாபு ஆகியோரைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். காயமடைந்த ஆய்வாளர் சுஜித் ஆனந்த், காவலர் பாண்டி ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வாளர் சுஜித் ஆனந்த், காவலர் பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மேலும், பாஜக நகர தலைவர் சீனிவாசன், ரகு பாபு, இந்து முன்னணி நகர அமைப்பாளர் சீனிவாசன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
அனுமதியின்றி ஒட்டப்பட்ட போஸ்டர் இதையும் படிங்க: நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம் - ஓடோடி சென்று கர்ப்பிணிக்கு உதவிய பெண் போலீஸ்