புதிய கல்விக்கொள்கை குறித்து ’எஜுகேட்டிங் இந்தியா’ என்ற தலைப்பில் ஜான்தயால் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி புத்தகத்தை வெளியிட, ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் தேவசகாயம் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசந்திதேவி, ”புதிய கல்விக்கொள்கையின்படி கல்வியை வணிகமயமாக்குவது, மதரீதியான கருத்துகளைப் புகுத்துவது, மாநில உரிமைகளைப் பறிப்பது உள்ளிட்ட நோக்கங்களுடன் மத்திய அரசால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
புதிய கல்விக்கொள்கையை நடைமுறைக்கு கொண்டுவந்தால், நாடு முழுவதும் உயர்கல்விக்கு பொதுவான நுழைவுத்தேர்வு முறையை மத்திய அரசு கொண்டுவரும். இதனால் ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்ல முடியாத அவலநிலை ஏற்படும்.
’தரத்தை உயர்த்துவதாகக் கூறி அடிப்படை அம்சத்தையே மாற்றும் முயற்சி புதிய கல்விக்கொள்கை’ மேலும், கல்வியின் தரத்தை உயர்த்துவதாகக் கூறி, அதன் அடிப்படை அம்சத்தையே மாற்றும் முயற்சியில் ஈடுபடுவார்கள். அது மட்டுமல்லாமல், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி என இந்நாட்டின் பன்மைத்துவத்தையே கேள்விக்குறியாக்கும் முயற்சிதான் இந்தப் புதிய கல்விக்கொள்கை.
’புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும்’ புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டால் தற்போது பொதுப்பட்டியலில் இருக்கக்கூடிய கல்வி முற்றிலும் மத்திய பட்டியலுக்கு சென்றுவிடும். இதனால் மத்திய அரசு விரும்பும் முயற்சிகளை எளிதாகச் செயல்படுத்த முடியும். எனவே, புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிராக 10 நாள்கள் பரப்புரை - கி.வீரமணி அறிவிப்பு