தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு தமிழ் ஆராய்ச்சி மையம், சென்னை சிட்டிஜன் மன்றம் சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் விடுதியில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில் தமிழிசை பேசுகையில், மேதகு என்பதை விட பாசமிகு என்பதே தனக்கும் பிடிக்கும் என்றார். தான் பெரிய சாதனையாளர் அல்ல; சாதாரண பெண்தான் என உருக்கமாகத் தெரிவித்த தமிழிசை, தனக்குக் கொடுத்த வேலையைச் சரியாகவும் மகிழ்ச்சியுடனும் செய்வேன் என உறுதியளித்துள்ளார்.
புதிய ஆளுநர் தமிழிசைக்கு சென்னையில் பாராட்டு விழா! - governor tamilisai
சென்னை: தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு தமிழ் ஆராய்ச்சி மையம், சென்னை சிட்டிஜன் ஃபோரம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
மீம்ஸ் உருவாக்குகிறவர்கள் தன்னை எவ்வளவு காயப்படுத்தியும் தான் கவலைப்படவில்லை எனக் கூறிய அவர், இறுதியில் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள் என்றார். தன்மீது விழுந்த கற்களை வைத்து தான் கோட்டை கட்டியதாகவும் கர்ஜித்தார். எதிர்மறை காரியத்தை நேர்மறையாக மாற்றிவிட்டால் நம்மை யாரும் அசைக்க முடியாது எனக் குறிப்பிட்ட தமிழிசை, அரசியல் மிகக் கடினமான ஒன்று; அதனை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மரம் வளர வளர தோட்டக்காரன் கிளைகளை வெட்டுவான்; ஆனால் அதன் வேரை ஒன்றும் செய்ய இயலாது எனச் சொன்ன தமிழிசை, அதுபோலத்தான் நாமும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அரசியலுக்குப் படித்தவர்களும் பெண்களும் அதிகம் வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட தமிழிசை, அரசியலில் நேர்மையும் தூய்மையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.