சென்னை:தமிழ்நாடு நிதிநிலை 2022-23 அறிக்கையில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், தமழ்நாடு பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினருமான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'ஜனநாயகம் மற்றும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய ரகுராம் ராஜன், இந்தியாவைப் பொறுத்தவரை ஜனநாயகம் மற்றும் பொருளாதாரத்தில் திருத்தம் தேவை என கூறினார்.
மேலும், இந்தியாவின் தாராளவாத ஜனநாயகத்தையும் நிறுவனங்களையும் வலுப்படுத்துவது நமது பொருளாதாரம். இது எதிர்காலத்திற்கு முக்கியமானது என குறிப்பிட்டார். மேலும், நமது தாராளவாத ஜனநாயகத்தை பெரும்பான்மை சர்வாதிகாரமாக சீரழிக்க நாம் அனுமதித்தால், அது நமது பொருளாதாரம் மட்டுமல்ல, ஒரு தேசமாக நமது ஆன்மாவும் பாதிக்கப்படும் என குறிப்பிட்டார்.
கல்வி ஒன்றே முக்கியம்:"இந்தியாவின் முன்னோக்கி செல்லும் பாதை, இந்தியாவின் வரலாற்று பலமான விவாதம் மற்றும் ஜனநாயகத்தின் மீது இருக்க வேண்டும். மேலும், சீனாவைப் போல நாமும் இருக்க முடியும் என்று நினைப்பதே நமது மோசமான தவறு. ஏனெனில், உற்பத்தி சக்தியை உருவாக்க சீனா தனது சர்வாதிகார அமைப்பிற்குள் பணியாற்றியது. நமது அமைப்பில், அதே பாதையில் நடக்க முயன்றால் நாம் சீனாவுக்கு நிழலாக இருப்போம்," என கூறிய பொருளாதார வல்லுநர் சேவைகள் அல்லது கல்வியில் கவனம் செலுத்தி இந்தியா தனது சொந்த பாதையை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.